search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.பி.எல். கிரிக்கெட்"

    ஐபிஎல் சீசன் 2019 கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.  
    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4- வது முறையாக கோப்பையை வென்றது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

    டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

    6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

    பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

    கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

    151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.  வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.

    சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது. 

    கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி-ஐதராபாத் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. #IPL2019 #DelhiCapitals #SunrisersHyderabad
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அத்துடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டு இருக்கிறது.

    டெல்லி அணியில் ஷிகர் தவான் (486 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (442 ரன்கள்), ரிஷாப் பான்ட் (401 ரன்கள்), பிரித்வி ஷா உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா (தென்ஆப்பிரிக்கா) உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்கு ஆயத்தமாக நாடு திரும்பி விட்டாலும், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள்.

    2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4-வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4-வது இடம் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

    ஐதராபாத் அணியின் பேட்டிங் தூணாக விளங்கிய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோர் உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு தயாராக சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனம் அடைந்துள்ளது. மனிஷ் பாண்டே (314 ரன்கள்) பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். கேப்டன் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் கலீல் அகமது, ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல ரிதத்தில் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2-வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, டிரென்ட் பவுல்ட்.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்: விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, பாசில் தம்பி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #IPL2019 #DelhiCapitals #SunrisersHyderabad 
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2019 #MIvCSK
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே அடைந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இதுவரை ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்திருக்கிறது.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.



    சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்துவதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.

    தொடக்க வரிசை வீரர்களின் பேட்டிங் தான் சென்னை அணிக்கு கவலைக்குரியதாக இருந்தது. அந்த குறையை போக்கிய ஷேன் வாட்சன் முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். கேப்டன் டோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோரும் பார்மில் இருப்பது சென்னை அணிக்கு உற்சாகம் தருகிறது. பந்து வீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கக்கூடிய விஷயமாகும். இந்த சீசனில் இங்கு நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள சென்னை அணி, உள்ளூரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையோடு பயணிக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவர்களது இடத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி வஞ்சம் தீர்த்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 4 ஆட்டங்களில் 2-ல் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும். 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் காணும் மும்பை அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பென் கட்டிங், குருணல் பாண்ட்யா, ராஹல் சாஹர், பும்ரா, மலிங்கா, மயங்க் மார்கண்டே.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்து விடும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    சென்னை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி இதுவரை 314 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். ‘டாப்-3’ பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன் (147 ரன்), அம்பத்தி ராயுடு (192 ரன்), சுரேஷ் ரெய்னா (207 ரன்) ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.



    பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் (16 விக்கெட்), தீபக் சாஹர் (13 விக்கெட்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்பஜன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (517 ரன்கள்), பேர்ஸ்டோ (445 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணியில் இடம் பிடித்து இருக்கும் இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்பு ஐதராபாத் அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சற்று பிரச்சினைக்குரியதாக உள்ளது. கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணி முறையே சென்னை, கொல்கத்தா அணிகளை எளிதில் வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும். பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முழு முனைப்பு காட்டும். இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் தோல்வியை சந்திக்காமல் 4 வெற்றியை தொடர்ச்சியாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஐதராபாத் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சென்னை, ஐதராபாத் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 8 முறையும், ஐதராபாத் அணி 3 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் அல்லது ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், ஷபாஸ் நதீம், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா.  #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
    அடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers
    பெங்களூரு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.



    இதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

    கோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.

    விராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers 
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. #KKR #RR #IPL2018 #Playoff
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

    தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கைதேர்ந்தவராக திகழும் தினேஷ் கார்த்திக் (438 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சுனில் நரின் (327 ரன் மற்றும் 16 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (264 ரன் மற்றும் 13 விக்கெட்), அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின் (425 ரன்) ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.



    ஏற்கனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது.

    தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி ஒரு வழியாக போராடி அதிர்ஷ்டத்தின் துணையுடன் ‘பிளே-ஆப்’ சுற்றை (14 புள்ளி) எட்டியது. முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் (548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இல்லாத நிலையிலும் கடைசி லீக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

    இந்த மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-

    கொல்கத்தா: கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், பியூஸ் சாவ்லா, ஜாவோன் சியர்லெஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

    ராஜஸ்தான்: ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், சோதி, உனட்கட், லாக்லின்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #KKR #RR #IPL2018 #Playoff
    ×